நானும் அவர்களும் வானொலியும் !..

நீண்ட காலமாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டாலும் இன்று எப்படியோ எழுத வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டேன். இலங்கையில் நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த காலம் அது. பாடசாலை காலங்களில் இடம்பெறும் எல்லா நிகழ்சிகளிலும் ஆஸ்தான அறிவிப்பாளனாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தாலும் இந்த துறைக்கான ஆரம்பம், தூண்டுதல்கள், ஊக்கங்கள், முயற்சிகள் என எல்லாவற்றுக்கும் காரணமாயிருந்தவர்கள் ஏராளமானவர்கள் .
                                                   
நான் படித்தோ கொழும்பு முகத்துவாரம் இந்துக்கல்லுரி, ஆரம்ப காலங்களில் எங்கள் முன்னால் அதிபர் சிவநாதன், எனது தமிழ் ஆசிரியை திருமதி இரவீந்திரன் ஆகியோரின் ஊக்கத்தாலே இவ்வளவு தூரம் இந்த துறையில் என்னாலும் சாதிக்கமுடிந்தது. இந்த துறையை நேசிக்க காரணமாயிருந்தவர்கள்  எத்தனையோ பேர் இன்று வரை.... இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஜாம்பவான்கள் தொடக்கம் இன்றைய இளம் அறிவிப்பளர்கள் வரையில் அடுக்கிகொண்டே போகலாம்.... 

                                             
இதில்  நான் இந்த துறையை தேர்வு செய்ய நேசித்தவர்களில் இன்றளவும் என்னால் மறக்கமுடியாதவர்கள் ஒரு சிலரே.. தனியார் வானொலிகளின் ஆரம்ப காலம் என்ற படியால் ஆரம்ப காலந்தொடக்கம் இலங்கையில் நான் இருந்த இறுதி காலங்கள் வரையிலும் நான் நேசித்த வானொலி சூரியன் மட்டுமே என்று சொல்லலாம். இருப்பினும் சூரியன் தந்த அறிவிப்பாளர்களில் நான் இறுதி வரை நெருங்கி பழகியவர்கள் ஒரு சிலரே..நான் படித்த பாடசாலையின் எந்த நிழ்ச்சி என்றாலும் சூரியனின் இன்றைய நிகழ்வுகளில் வந்துவிடும் அளவுக்கு சூரியனுக்கும் எனக்கும் இடையிலான உறவு. எங்கள் பாடசாலையில் பலரை சூரியன் பக்கம் கொண்டு சென்ற பெருமையும் உண்டு... இதற்கும் அந்த ஒரு சிலரே கரணம். அவர்களுடனான நட்பு என்றே சொல்லவேண்டும்.
                                                         
இலங்கையின் தலைநகரில் தனித்துவமாக தமிழ் வளர்த்த பாடசாலைகளில் எங்கள் கல்லூரியான கொழும்பு முகத்துவாரம் இந்து கல்லூரியும் ஒன்று. ஆரம்பத்தில் ஒரு சிறிய பாடசாலையாக ஆரம்பித்து படி படியாக பல பரிணாமங்களை கண்டு கொழும்பு வடக்கில் ஒரு இந்து கல்லூரியாக நிமிர்ந்து நிற்கின்றது. கல்லூரியின் ஆரம்ப கால செயற்பாடுகளில் எனக்கும் பங்கு உண்டு என்பதில் சந்தோசமாக இருக்கின்றது. கல்லூரியின் அறிவிப்பாளனாக ஆரம்பித்து கல்லூரியின் விவாத அணியின் உருவாக்கம் வரை சொல்லலாம். இப்படி தான் எனக்கும் அறிவிப்புதுறைக்குமான நெருக்கம் ஏற்பட்டது எனலாம். ஆரம்பத்தில் 99 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். இலங்கை வானொலி வானம்பாடியில் அறிவிப்பாளராய் இருந்த பகீரதனால் (மதன் காந்தன் இப்போது கனடாவில்) வாலிபர் வட்டம் நிகழ்ச்சியில் பங்குபெற்றும் வாய்ப்பு கிடைக்க அதுவே முதல் படிக்கல்லாக ஆரம்பித்தது. இன்று வரை எந்தனையோ வானொலிகள் எந்தனையோ நட்புக்கள் எத்தனையோ நிகழ்ச்சிகள் பிரிவுகள் பிளவுகள் மாற்றங்கள் என அடுக்கிகொண்டே போகலாம் . இன்றுவரை தொடர்கின்றது என் வாழ்க்கையில் இன்னொரு உறவாக ஒலிபரப்பு துறை. வாழ்க்கை துணையை தேடி தந்ததும் இந்த வானொலித்துறை தான்!.. வாழ்நாளில் நான் அதிகம் நேசித்து தேடிகொண்ட விடயங்களில் இதுவும் ஒன்று என்பதால் இதனால் பெற்றவைகளும் சரி இழந்தவைகளும் சரி ஏராளம் என்றுதான் சொல்லவேண்டும். எத்தனையோ தடவைகள் முற்றுபுள்ளி வைக்க நினைத்திருக்கின்றேன். வாழ்நாளில் நான் அதிகம் நேசித்து தேடிகொண்ட விடயங்களில் இதுவும் ஒன்று என்பதால் அது முடியாமல் போய்விடுவதுமுண்டு. இந்தளவு தூரம் இந்த துறையில் நான் பயணிக்க என்னோடு எப்போதும் துணை நின்ற என் பெற்றோருக்கு தான் முதல் நன்றி கூறவேண்டும். வாழ்க்கையில் நான் பெற்ற வரங்களில் அதுவும் ஒன்று.
                                       
சரி இனி இவ்வளவு தூரம் என்னையும் தங்களின் பாதைக்கு அலைந்து சென்ற நான் நேசித்த அந்த நால்வர் யார் என்ற விடயத்தை சொல்லியாக வேண்டும் இன்று பிறந்தநாளை கொண்டாடும் லோஷன் அண்ணாவுக்கு வாழ்த்துக்களை சொல்லி கொள்ளும் அதே வேளை, வானொலி துறையில் நான் நேசித்துகொண்டவர்களில் பலர் இருந்தாலும் இலங்கையில் இருந்த காலத்தில் மறக்க முடியாதவர்கள் நால்வர். இதில் என்ன அதிசயம் என்றால் இந்த நால்வரும் சூரியனுடாக நேசித்தவர்கள். அபர்ணாசுதன்,வெள்ளையன் ,மப்ரூக், லோஷன் தான் அந்த நால்வர். இவர்களால் தான் அதிகம் எனக்கும் சூரியனுக்கும் இடையிலான நட்பு வளர்ந்தது எனலாம்.
                                           
வானொலி என்றால் இப்படி தான் இருக்கவேண்டும் என்ற காலத்தில் இப்படியும் செய்யலாம் என்று ஜனரஞ்சகமான வானொலி பயணத்தை ஆரபித்து வைத்தவர் என்றால் அது அபர்ணா அண்ணா தான் எனலாம். சூரியன் பக்கம் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர். வானொலி துறையை நான் நேசிக்க காரணம் இவரின் சூரிய ராகங்கள். அன்றிலிருந்து நேயராக ஆரம்பித்து பின்னர் பாட சாலை நிகழ்ச்சிகளுக்காக பலமுறை சூரியன் கலையகத்தில் சந்திதுண்டு. நாங்கள் உயர்தரம் படித்தபோது செயற்திட்டம் ஒன்றுக்காக இவரை செவ்வி கண்டதன் பின்னர் இன்னமும் நெருக்கமானது நட்பு. இன்றுவரை முகப்பு புத்தகத்தினுடாக தொடர்கின்றது.
                                           
போட்டி நிகழ்ச்சி என்றால் ஒரே மாதிரியானவையாக இருந்த பொது மெய் மறப்போம் பொய் கறப்போம் என்ற கல கலப்பான நிகழ்ச்சியூடாக தன் பக்கம் என்னையும் இழுத்தவர் வெள்ளையன் அண்ணா. எந்த நிகழ்ச்சி என்றாலும் அழகாக அருமையாக நடத்துவார். எத்தனையோ முறை இவரை பற்றியெல்லாம் சக வானொலியாளர்கள் வம்பிழுத்த போதெல்லாம் பொறுமையோடு நிகழ்ச்சி செய்தபோது தான் ஓர் ஒலிபரப்பாளன் எப்படி இருக்கவேண்டும் என்று புரிந்து கொண்டேன். பழகுவதற்கு எப்போதும் மென்மையான மனம் படைத்தவர். இவர் வானொலியில் இருந்து விடைபெற்ற நிகழ்ச்சியை கேட்டு அழுதவர்களில் நானும் ஒருவன். சட்டென்று கவிதை சொல்லும் திறமை ஒரு சிலருக்கே அதில் வெள்ளையன் அண்ணாவுக்கு நிகர் அவரே.
                                       
அடுத்தவர் மப்ரூக் அண்ணா, என்னுடைய ஒலிபரப்பு வாழ்க்கையில் பல இடங்களில் எனக்கு தோள் கொடுத்தவர். சூரியனின் நேற்றைய காற்றோடு ஆரம்பித்த உறவு இன்றளவும் தொடர்கின்றது. ஆரம்ப காலங்களில் நேற்றைய காற்றில் நான் கவிதை வாசிக்கும் பொது சரி பிழை சொல்லி திருத்தியவர். இவரின் நேற்றைய காற்றுக்காக எப்போதும் காத்திருக்கும் காலங்கள் அவை. சூரியனில் நான் அதிகம் தொடர்பு கொண்டவர் அல்லது அதிகம் உறவாடியவர் என்றால் அது மப்ரூக் அண்ணா தான். நேயராக ஆரம்பித்து பின்னர் கையடக்க தொலைபேசி இலக்கம் தொடக்கம் கலையக தனிபட்ட தொலைபேசி இல்லக்கம் வரை நீண்டு கொண்டது எங்களுக்கிடையிலான நட்பு. கனடாவில் பண்பலை வானொலியில் நிகழ்ச்சி ஒன்று செய்ய சந்தர்ப்பம் கிடைத்த போது அந்த நிகழ்ச்சியிக்கான தலைப்பு தேர்வு செய்வதில் தொடக்கம் முதல் நிகழ்ச்சிக்கான ஆலோசனை வரையும் தந்து ஊக்கபடுத்தியவர். இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் இன்றளவும் அந்த பெயர் தான் அந்த நிகழ்ச்சிக்கு (நந்தவனம் ). மப்ரூக் அண்ணாவிடம் நான் ரசித்த இன்னொரு விடயம் அவருடைய கவிதைகள் மற்றும் பாடல் தெரிவுகள். எந்த இறுமாப்பும் இல்லாத ஒரு இனிமையான மனிதர்.
                                                       
இறுதியாக இன்று பிறந்த நாளை கொண்டாடும் லோஷன் அண்ணா, நிறைய சொல்லலாம். லோஷன் அண்ணா சூரியனுக்கு வந்த காலம் அது வியாச அண்ணாவின் வரவேற்புடன் என்னை ஈர்த்து கொண்ட இன்னொரு உறவு. பரந்துபட்ட தவல்களோடு ஏற்ற இறக்கங்களோடு இவர் செய்யும் அறிவிப்பு பாணி தனிதுவமக்கியது இவரை எனலாம் . அப்படிதான் நானும் ரசிக்க ஆரம்பித்தேன். இன்று வானொலி உலகில் பலருக்கு உதாரணம் சொல்ல கூடியவர். நேயராக ஆரம்பித்து பின்னர் பாட சாலை நிகழ்ச்சிகளுக்காக பலமுறை சூரியன் கலையகத்தில் சந்தித்ததுண்டு . ஒரு நாள் பாடத்திட்டத்தின் செயல் திட்டத்துக்காக வைரமுத்துவின் கவிதை தொகுப்பினை இவரிடம் கேட்டிருந்தேன். உடனேயே கலையகம் வர சொல்லி இரண்டு கவிதை புத்தகங்களை தந்திருந்தார், அதனோடு தான் இன்னமும் நெருக்கமானது எங்களின் உறவு. கனடா வந்தபின்னும் வானொலிகளின் நேரடி ஒளிபரப்புகளுக்காக இடையிடையே தொடர்பு கொண்டதுண்டு. பழகுவதற்கு எப்போதும் இயல்பான ஒருவர் என்ன கொஞ்சம் கோபம் அதிகம் அப்போது.... எப்பொழுது அண்ணா எங்களுக்கு வாய்ப்பு வரும் என்று அடி அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்திருக்கின்றேன். இன்றும் நேரம் கிடைக்கும் போது இவரின் விடியலோடு இணைந்திருப்பதுண்டு.
                                      
இன்று லோஷன் அண்ணா பற்றிய சதீஸின் பதிவை பார்த்தபோது தான் நீண்ட நாள் எழுதவேண்டும் என்று நினைத்திருந்த இந்த பதிவை எழுதினேன். கனடாவில் நான் வானொலித்துறையில் நேசித்தவர்களும் உண்டு. அது இன்னொரு பதிவில் எழுதலாம்.... இன்று கனடாவிலும் இந்த துறையில் நான் தொடர காரணம் இந்த நால்வரின் தாக்கம் என்றே சொல்லுவேன்... ! பதிவு கொஞ்சம் நீளம் தான் இருப்பினும் நீண்ட பாரத்தை இறக்கி வைத்திருக்கின்றது போன்ற ஒரு சுகம் மீண்டும் சந்திக்கலாம்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "நானும் அவர்களும் வானொலியும் !.."